Friday, October 8, 2010

தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்!

தினமணியில் வந்த தலையங்கம்.

காஷ்மீரில் அண்மைக் காலமாக நடைபெற்ற அனைத்துக் கலவரங்களின் பின்னணியிலும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் உள்ளன என்று இந்தியா கூறியபோது, பாகிஸ்தான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. வழக்கம்போல மறுத்தது. ஆனால் இப்போது அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் "இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை உருவாக்கியது உண்மைதான்' என்று கூறியிருக்கிறார். இதைவிடச் சிறந்த வாக்குமூலம் ஏதாவது இருக்க முடியுமா? உண்மையை ஒப்புக்கொண்டு பாவத்துக்குக் கழுவாய் தேடுகிறார் என்று பார்த்தால், "பயங்கரவாதிகளை உருவாக்கியது தவறு என்று ஒரு போதும் என்னால் சொல்ல முடியாது. அது நூறு விழுக்காடு நியாயமான செயல்தான்' என்று சொல்லி, பாகிஸ்தான் மக்களிடையே நன்மதிப்பைப் பெற முற்படுகிறார். ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் பற்றிப் பேசி சுமுக உடன்பாடு காண இந்தியா முன்வரவில்லை; காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகள் கண்ணை மூடிக் கொண்டு வாளா இருந்தன என்றெல்லாம் குற்றம் சுமத்தும் முஷாரப், ஒன்றைப் புரிந்துகொள்ளவில்லை. எல்லா நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் எதிர்ப்புச் சொல்லாமல் மெüனமாக இருக்கும் என்றால், அதற்கு என்ன பொருள்? அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள அவரது பேச்சு ஒவ்வொன்றிலும் இந்தியா மீதான காழ்ப்புணர்வும், பாகிஸ்தான் மக்களிடம் எதைச் சொல்லியாகிலும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்கிற முயற்சியும்தான் தெரிகின்றன. லண்டனில் உட்கார்ந்துகொண்டு, உலகின் உயர்ந்த வசதிகளை அனுபவித்துக் கொண்டு, ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கவும், தன்னை உண்மைவிளம்பி என்று எல்லோரும் அதிசயித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காகவும் செய்யப்படும் இத்தகைய பேச்சுகள் நாம் அறிந்திராத உண்மைகள் அல்ல. காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்துக்கொண்டு இருப்பதைப் போலவும், மற்ற நாடுகள் அதை ஆதரிப்பது போலவும் பேசிக் கொண்டிருக்கும் முஷாரப், ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்கப் படைகள் வெளியேறினால் தெற்குஆசிய நாடுகளில் தீவிரவாதம் கட்டுக்கடங்காமல் போய்விடும் என்றும் பேசுகிறார். காஷ்மீரின் உரிமையை இந்தியா பறிக்கிறது என்பதாகச் சொல்லிக்கொண்டே ஆப்கானிஸ்தான் மக்கள் உரிமையை அமெரிக்கா பறிப்பதை நியாயப்படுத்தவும் செய்கிறார். தனக்கு அமெரிக்காவின் ஆதரவை இதன்மூலம் பெற்றுக் கொள்ளும் முயற்சிதான் இது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நவம்பர் 26, 2008-ல் நடந்த மும்பைத் தாக்குதலுக்குக் காரணம் பாகிஸ்தான் ராணுவம் உருவாக்கிய தீவிரவாதிகள்தான் என்பதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், தற்போது இரண்டு ராணுவ மேஜர்கள் உள்பட 5 பேரை கைதுசெய்யும் உத்தரவை வழங்கியுள்ளது இன்டர்போல். அமெரிக்காவின் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் டேவிட் ஹெட்லி அளித்த விவரங்களின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு நாடு தனக்காக எதைச் செய்தாலும் அது நியாயம்தான் என்கிறார் முஷாரப். இதே கண்ணோட்டத்தில் இந்தியாவும் பயங்கரவாதிகளை உருவாக்கி, பாகிஸ்தானுக்கு எதிராக அனுப்பிவிடுவது என்பது இயலாத காரியம் அல்ல. உலக சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் இதுவரை எந்தவொரு அன்னிய நாட்டின்மீதும் படையெடுத்துத் தனது எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ளாத நாடாக இந்தியா மட்டுமே காட்சியளிக்கிறது. காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்பதை நாம் 1947-ல் படைபலத்தால் நிலைநிறுத்தாத தவறுக்குத்தான் இன்றுவரை விலை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். 1947-ல் நாம் நினைத்திருந்தால் பாகிஸ்தானிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பஞ்சாபிகளையும் சிந்திகளையும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் குடியேற்றி இருக்க முடியும். காஷ்மீர மக்களின் தனித்தன்மை சிதைந்துவிடக்கூடாது, அந்த இனம் அழிந்துவிடக் கூடாது என்கிற நமது நல்லெண்ணம்தான் இன்று விபரீதங்களுக்கு வழிகோலி இருக்கிறதோ என்றுகூடத் தோன்றுகிறது. பாகிஸ்தானுக்கு கோடிகோடியாய்ப் பணத்தைக் கொட்டுகிறது அமெரிக்கா. பணத்தைக் கொட்டிவிட்டு, நீங்கள் விசுவாசமாக இல்லை என்று கடிந்து கொள்ளவும் செய்கிறது. ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் எங்கேயோ ஒளிந்து இருக்கிறார் என்று அமெரிக்கா சந்தேகப்படுகிறது. ஆனால் அதற்காக பாகிஸ்தானைக் குற்றம்சாட்டிப் பகைத்துக் கொள்ளவும் தயாராக இல்லை. பாகிஸ்தானை பாம்பு என்று அடிக்கவும் முடியாமல் பழுது என்று தள்ளவும் முடியாமல் இருக்கிறது அமெரிக்கா. அமெரிக்கா மட்டுமல்ல, சீனாவும்தான் பாகிஸ்தானிடம் நட்புறவு வைத்துக்கொள்ளத் துடிக்கிறது. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீரப் பகுதிகளை திபெத்துடன் இணைக்கச் சாலைகளை அமைத்து உதவுகிறது. பாகிஸ்தான் அணு ஆயுதம் தயாரிக்க உதவுவதுகூட சீனாதான். ஆனால், பாகிஸ்தான் சீனாவுக்காவது விசுவாசமாக இருக்கிறதா என்றால் இல்லை. சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் அல்-கொய்தாவுடன் இணைந்து உல்கர் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்து ஊடுருவ உதவுகிறது பாகிஸ்தான். அங்கே சீனாவுக்கு எதிராக உல்கர் தீவிரவாதிகள் புரட்சிக்கு வித்திடுகிறார்கள். தீவிரவாதத்தின் உலைக்களனாக பாகிஸ்தான் இருக்கிறது என்பது உலகுக்குத் தெரிகிறது. ஆனால், பாகிஸ்தானைக் கண்டித்து அடக்கி வைக்க உலகம் தயாராகவும் இல்லை. பாம்புக்குப் பால் வார்க்கிறார்கள். வினை விதைப்பவர்கள் திணையா அறுக்க முடியும்?

No comments: